Last Updated:
குஜராத்தில் கணவரை விஷம் வைத்து கொன்று தொழிற்சாலையில் புதைத்த மனைவி, காதலனுடன் கைது. 2 ஆண்டுகளாக கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொலை செய்து தொழிற்சாலையில் புதைத்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜிக்னேஷ் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக உறவினர்களிடம் பிரித்வி கூறி வந்துள்ளார். இந்நிலையில், ஜிக்னேஷின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டதால், ஜிக்னேஷின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை கேட்டுள்ளார். அதற்கு பிரித்வி, சமாளிக்கும் நோக்கில் திணறிய படி பதில் அளித்ததால் அவருக்கு சந்தேகம் எற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிக்னேஷின் சகோதரர் அசோக், பிரித்வியிடம் விசாரித்தபோதும் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அசோக், தனது சகோதரரை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜிக்னேஷை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கினர். அப்போது, மனைவி பிரித்வியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் திருமணத்திற்கு முன்பிருந்தே நிலேஷ் என்பவருடன் பிரித்விக்கு காதல் தொடர்பு இருந்ததும், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததும் தெரியவந்துள்ளது. தங்களது உறவுக்கு தடையாக இருந்த ஜிக்னேஷை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டதாகவும், அவர் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் அலட்டிக் கொள்ளாமல் மனைவி பிரித்வி கூறியிருக்கிறார். ஜிக்னேஷ் உயிரிழந்த பிறகு, அவரது உடலை தொழிற்சாலை வளாகத்திற்கு கொண்டு சென்று, சுமார் 12 அடி ஆழமாக குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும், அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்ததாகவும் கூறியதைக் கேட்டு போலீசாரே சற்று ஆடிப்போயினர்.
ஏதோ கிரைம் நாவலில் வருவது போன்று பிரித்வி கூறிய கதையைக் கேட்டு அரண்டு போன போலீசார் ஜிக்னேஷ் புதைக்கப்பட்டதாக அவர் கூறிய தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு கொலையை செய்து விட்டு இரண்டு ஆண்டுகளாக ஊரையே ஏமாற்றி வந்த பிரித்வி மற்றும் அவரது காதலன் நிலேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவு.. கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி.. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?


