ரொம்பின்:
பகாங், தியோமான் தீவில் தனது மகளுடன் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 55 வயது சுற்றுலாப் பயணி ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில் வசித்து வந்த முகமது சேயார் முசாசே என்ற அப்பயணி, கடந்த சனிக்கிழமை முதல் தியோமான் தீவுக்கு ஒரு வார காலச் சுற்றுலா வந்திருந்த நிலையில் இச்சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“பாதிக்கப்பட்ட நபர் இன்று காலை 11 மணியளவில் தனது மகளுடனும் பயிற்சியாளருடனும் ஆழ்கடல் நீச்சலுக்குச் சென்றுள்ளார். 6 மீட்டர் ஆழத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை நீந்தியபோது அவருக்கு எவ்விதப் பிரச்சினையும் இருக்கவில்லை. பயிற்சி முடியும் தருவாயில் பயிற்சியாளர் மகளை நீரின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றபோது, 3 மீட்டர் தொலைவில் இருந்த முசாசேயின் வாயிலிருந்த சுவாசக் கருவி கழன்று அவர் சுயநினைவின்றித் தத்தளித்துள்ளார்” என்று, ரொம்பின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்பிரண்டன் ஷெரிஃப் ஷாய் ஷெரிஃப் மொண்டோய் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் உடனடியாக மீட்கப்பட்டு, கிராமவாசி ஒருவரின் படகு மூலம் கம்போங் தெக்கெக் சுகாதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், நண்பகல் 12.40 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.



