தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுக நாளில் இப்படியா நடக்கணும்.. கல்யாண் ஜூவல்லர்ஸ் பாவம்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்த வேளையில் பங்குச்சந்தையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் அளிக்க முடிவு செய்திருக்கும் வேளையில், தமிழ்நாடு அரசு 4,41,667 தங்க மோதிரம் வாங்க உள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், ஒரு மோதிரத்திற்கு தலா 0.01 பைசா தொகையைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு சப்ளை செய்ய ஜோய் ஆலுக்காஸ் ஒப்புதல் அளித்த நிலையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இதே தொகைக்கு செய்து தர ஒப்புதல் அளித்தது.

இதன் வாயிலாக 4,41,667 தங்க மோதிரம் சப்ளை செய்யும் திட்டத்தில் 70 சதவீதத்தை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், 30 சதவீதத்தை கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் அளிக்கத் தமிழ்நாடு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இத்திட்டத்தின் அறிமுக நாளில் மும்பை பங்குச்சந்தையில் 1.8 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 559.20 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 573.50 ரூபாய் அளவில் இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 559.20 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு என்பது 649.00 ரூபாயாக இருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 90 ரூபாய் வித்தியாசத்தில் உள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் சுமார் 70 சதவீத பங்கை பெற்ற ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் இல்லை, மேலும் இந்நிறுவனத்தின் நிறுவனரான ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய்-யிடம் தான் 99.98 சதவீத பங்குகளும் உள்ளது.
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜயால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் இருக்கும் 107 அரசு மருத்துவமனையில் தினமும் 100 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் பெற 2 முக்கிய தகுதி உள்ளது. 1 ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். 2. தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்போராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு ஆன்லைனிலோ அல்லது நேரிலோ தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போதே தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

