கோலாலம்பூர்:
கோலாலம்பூர், தாமான் தானாவ் கோத்தா (Taman Danau Kota) ஏரியில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில், அதற்கான சாத்தியமான காரணங்களை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) இன்று விளக்கியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் (Dissolved Oxygen – DO) அளவு திடீரென குறைந்ததே இந்த மீன்களின் மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று DBKL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பலத்த மழையினால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட வண்டல் மண் மற்றும் அசுத்தமான கழிவுகள் ஏரி நீரில் கலந்ததும் இந்த அசம்பாவிதத்திற்கு வழிவகுத்துள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் ஏரியின் மேற்பரப்பில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த போதிலும், DBKL-இன் உடனடி அதிரடி நடவடிக்கையால் மாலை 4 மணிக்குள் ஏரி முழுவதும் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது. பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் ஏரி மேலும் மாசடைவதைத் தடுக்க இந்த விரைவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தாமான் தானாவ் கோத்தா ஏரியானது பொதுமக்களின் பொழுதுபோக்கு பூங்காவாக மட்டுமல்லாமல், கோலாலம்பூரின் முக்கிய வெள்ளத் தடுப்புத் தேக்கக் குளமாகவும் (Flood Retention Pond) செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, பெருமழை பெய்யும் காலங்களில் வடிகால் அமைப்புகள் வழியாக குப்பைகள், ரசாயனப் பொருட்கள் மற்றும் கரிமக் கழிவுகள் நேரடியாக இந்த ஏரிக்குள் பாய்கின்றன. இதேபோன்ற சம்பவங்கள் கோலாலம்பூரில் உள்ள மற்ற வெள்ளத் தடுப்புக் குளங்களிலும் இதற்கு முன் நிகழ்ந்துள்ளதாக DBKL சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கொண்டு குப்பைகள் மற்றும் மிதக்கும் அசுத்தங்கள் ஏரிக்குள் நுழைவதைத் தடுக்க, ஏரியின் நீர் வரத்து வாயில்களில் (Inlets) பிரத்யேகக் குப்பைத் தடுப்புகள் (Trash Traps) தற்போது பொருத்தப்பட்டுள்ளன.
அதோடு, மீன்கள் மடிந்ததற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய, கூட்டரசு பிரதேச சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து நேற்று (ஜூன் 16) ஏரியின் நீர் மாதிரிகள் (Water Samples) சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தலைநகர் வாசிகள் இந்த பொழுதுபோக்கு பூங்காவைப் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்ய ஏரியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் மாநகராட்சி உறுதியளித்துள்ளது.




