தமிழகம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கு இடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை, முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (21) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அந்த அமைப்பின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக
புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய மீன்பிடியாளர்கள் எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான செத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம்
குறிப்பாக புங்குடுதீவின் கரை வரை வந்து அந்த வெறியாட்டத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.
இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதைவிட கடற்றொழில் அமைச்சரும் கடற்றொழிலாளர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன்
செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.
இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அநுர அரசாங்கத்திடம் கோருகின்றோம். ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இங்கொன்றும் அங்கொன்றும்
பேசித்திரிகின்றாரே தவிர உருப்படியான எதையும் இதுவரை செய்யவில்லை.
வன்முறையாக மாறும் சூழல்
தேர்தல் காலத்தில் கடற்றொழிலாளர்களிடம் வாக்குகள் பெற்றதை இந்த சந்திரசேகர் அமைச்சரும் அவர்சார் தரப்பினரும் மறந்துவிட்டனரென்றே தோன்றுகின்றது.

அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும்
இழந்து வருகின்றோம்.
இதன் உச்சமாக இனிவரும் நாட்களில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே
முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக்
கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளைத்
தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்“ எனவும் தெரிவித்தார்.
செய்தி – பு.கஜிந்தன், த.பிரதீபன்
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

