Last Updated:
வளைகுடா நாடுகளில் போரினால் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றைச் சீரமைக்கக் கால அவகாசம் தேவைப்படும்
நிதி ஆலோசகர் விவேக் கார்வா கூறுகையில், “போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதால், இனி தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. அப்படி தங்கம் விலை உயர்ந்தால், வெள்ளியின் விலையிலும் தாக்கம் ஏற்படக்கூடும். தங்கம் எந்த அளவிற்கு உயர்கிறது என்பதை பொறுத்தே, வெள்ளி விலையிலும் தாக்கம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
பொருளாதார விமர்சகர் வள்ளியப்பன் கூறுகையில், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், இதன் பாதிப்பிலிருந்து பொருளாதார ரீதியாக மீண்டெழ இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். கச்சா எண்ணெய் விலை இனி வரும் காலங்களில் சரியும் என்றாலும், உடனடியாகப் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை. ஏனெனில், போர் காலங்களில் வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தி ஏற்கனவே குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வளைகுடா நாடுகளில் போரினால் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றைச் சீரமைக்கக் கால அவகாசம் தேவைப்படும். இதனால் விநியோகம் உடனடியாகச் சீரடையாது என்பதால் பெட்ரோல், டீசல் விலை உடனடியாகக் குறைய வாய்ப்பில்லை. அதேசமயம், போர்க்காலத்தில் தங்கம் விலை ஏற்கனவே போதுமான அளவு உயர்ந்துவிட்டதால், இனி அதில் பெரிய அளவில் விலைமாற்றம் அல்லது பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், போர் நிறுத்தத்தால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டாலும், ஜப்பான், தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஏற்றம் மிகவும் குறைவே. இந்தியாவின் இந்த மந்தநிலைக்குப் போர் மட்டுமே காரணமல்ல; இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு முக்கியக் காரணியாகும். இதனால், போர் முடிந்தாலும் கூட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்கும் நிலையே காணப்படுகிறது. மேலும், தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயரவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்
Jun 15, 2026 10:14 PM IST


