Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், மார்கெட்டில் எந்தவொரு சலனமும் இல்லாமல் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்கும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் மார்கெட்டில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் போட்டு உடைத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் சரிந்து வந்த தங்கம் விலை, இப்போது மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இடையில் அவ்வப்போது குறைவது, பிறகு மீண்டும் ஏறுவது என மாறி மறியே இருந்து வருகிறது. தங்க சந்தையில் இதுபோல மிக பெரிய மாற்றங்கள் நடக்கும் போதிலும், பொதுமக்கள் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். மக்கள் இப்போது தங்கத்தை பெரிதாக சீண்டுவது போல தெரியவில்லை.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே தங்க மார்கெட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார். தங்கத்தை இப்போது மக்கள் வாங்குவதில்லை என சொல்லியுள்ள ஆனந்த் சீனிவாசன், மக்கள் ஏன் இதுபோல காத்திருக்கிறார்கல் என்பதையும் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், “சர்வதேச சந்தையில் 4300 டாலரை தங்கம் விலை தாண்டிவிட்டது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் இன்னுமே தங்கம் விலை கொஞ்சம் உயர வேண்டும். ஆனால், உயராமல் இருக்கிறது. அதற்கு காரணம் இருக்கிறது. நாடு முழுக்க உள்ள துறைமுகங்களுக்கு சுமார் 100 டன் தங்கம் வந்துவிட்டது. இறக்குமதி வரி எல்லாம் கட்டி ரெடியாக இருக்கிறது. உள்ளூரில் யாராவது வாங்கினால் அது வெளியே வந்துவிடும்.
100 கிலோ டன் தங்கம்
அதாவது இறக்குமதி செய்பவன் காசு கொடுத்து இறக்குமதி செய்து, வரி எல்லாம் கட்டி ரெடியாக வைத்திருக்கிறான். இங்கு உள்ள நிறுவனங்கள் யாராவது வாங்கினால் தானே அதை வெளியே எடுக்க முடியும். இப்படி சுமார் 100 கிலோ டன் தங்கம் ரெடியாக இருக்கிறது. ஆனால், இங்கு வாங்க யாருமே இல்லை.
மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துவிட்டனர். இதனால் தான் நிறுவனங்களும் தங்கம் வாங்குவதில்லை. புகழ்பெற்ற எல்லா நகைக்கடைகளிலும் தங்கம் விற்பனை மந்தமாகிவிட்டது. ரூபாய் அடிப்படையில் பார்த்தால் தங்கம் விற்பனை அதிகரித்திருப்பது போல தோன்றும். ஆனால், கிராம் அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் விலை சரிந்தே வருகிறது. அதாவது தங்கம் வாங்க மக்கள் தயாராக இல்லை என்பதே இது காட்டுகிரது. இதனால் தான் பல தங்க நகைக்கடைகளின் பங்குகளும் கூட சரிந்துள்ளன.
குருவி தங்கம்
அதேநேரம் இந்த துறைமுகத்தில் இருக்கும் தங்கம் விலை உள்ளே வரும்போது விலை பயங்கரமாக சரியும் என சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போதும் நெட்வொர்க்கில் இல்லாத குருவி தங்கம் வந்து கொண்டு தான் இருக்கிறது. துபாயில் இருந்து குருவி பறந்து பறந்து தங்கத்தை எடுத்து வருவார்கள். தங்கத்திற்கான இறக்குமதி அதிகரித்துள்ளதால் குருவி தங்கம் அதிகரித்திருக்கிறது. சந்தையில் உள்ள உண்மையான தங்க்ததை விட குருவி தங்கம் ரூ.1000 குறைவாக இருக்கும்.
ஆனால், இந்த தங்கம் நம் அனைவருக்கும் கிடைக்காது. ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.! நாம் போய் கேட்டால் அதிகாரப்பூர்வ விலையை தான் சொல்வார்கள். அந்த அதிகார்ப்பூர்வ விலையில் தங்கம் வாங்க ஆள் இல்லை என்பதே உண்மை! தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கும் மக்கள் காத்திருக்கிறார்கள். அல்லது இப்போது ஆடி மாசம் வேண்டாம் என யோசிக்கலாம். அல்லது மக்களின் வாங்கும் திறன் குறைந்து போய் இருக்கலாம். இந்த மூன்றில் எந்த காரணம் வேண்டும் என்றாலும் இருக்கலாம்.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் உலக நாடுகள் தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருகின்றன. 102 டன் தங்கத்தை உலகின் பல நாடுகள் வாங்கியுள்ளன. இப்போது உலக நாடுகள் வர்த்தகத்திற்கு டாலர், பாதுகாப்பிற்கு தங்கம் என தங்கள் கையிருப்பை மாற்றி அமைத்துள்ளன. அதேநேரம் வரும் மாதங்களில் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் டாலர் மதிப்பு உயரும். தங்கம் விலை குறையும். ஆனால், வட்டியை உயர்த்தும்போது அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் வட்டியை சீக்கிரம் மீண்டும் குறைப்பார்கள். அப்போது தங்கம் விலை எகிறும்” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!




