Last Updated:
மேற்கு வங்க நந்திகிராம் இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி ஆதரவு வேட்பாளர் சஞ்சிதா டே பிரதான் வேட்புமனுவை திரும்பப் பெற்றார். பின்னர் மம்தா ஆதரவளித்த காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி தரப்பின் நந்திகிராம் வேட்பாளர் சஞ்சிதா டே பிரதான் திடீரென அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்துவிட்டு, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். இது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் தனது ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி அறிவிக்க, தற்போது அதிலும் பெரும் திருப்பம் ஏற்பட்டு அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தின் முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்றார். பாஜகவில் இப்படியான செயல்கள் நடந்துவர, தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்த திரிணாமுல் காங்கிரஸில் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி ஆகியோர் தலைமையில் தனி அணி உருவானது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி, பவானிப்பூரை தக்கவைத்துக் கொண்டு, நந்திகிராம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில், மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து நந்திகிராம் தொகுதி வேட்பாளராக சஞ்சிதா டே பிரதான் அறிவிக்கப்பட்டு, அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்தச் சூழலில், இன்று சஞ்சிதா டே பிரதான் திடீரென அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். இது அம்மாநில அரசியலிலும், மம்தா பானர்ஜி தரப்பு திரிணாமுல் காங்கிரஸ் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கிடையில், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் இருந்து தங்களுக்கே திரிணாமுல் காங்கிரஸ் சொந்தம் என போர் கொடி தூக்கியது. அதேசமயம், கட்சியின் தலைவரான தங்கள் தரப்புக்கே கட்சியும், சின்னமும் சொந்தம் என மம்தா பானர்ஜி தரப்பு வாதிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இரண்டு தரப்பும் பயன்படுத்த தடை விதித்து முடக்கியது.
தொடர்ந்து மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தையும், ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டது. இதேபோல், எதிர் தரப்பான ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரையும், ‘கடித உறை’ சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதற்குள் மம்தா பானர்ஜி தரப்பு நந்திகிராம் வேட்பாளர் சஞ்சிதா தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.
இதன் காரணமாக நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு தனது ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ ஆதரவு தருகிறது என அறிவித்தார் அத்தரப்பு தலைவர் மம்தா பானர்ஜி. இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் பழைய வழக்கு ஒன்றில், நந்திகிராம் இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் மேற்குவங்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


