ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள முக்கிய பயணத்திற்கு முன்னதாக பல்வேறு சர்வதேச இடையூறுகள் இருந்தபோதிலும் அமெரிக்காவுடனான உறவுகள் நிலையானதாக இருப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.
இது குறித்துச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய வழிகாட்டுதலில் அரசத் தலைவர்களுக்கிடையிலான இராஜதந்திரம் ஈடுசெய்ய முடியாத பாத்திரத்தை வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திரப் பேச்சுவார்த்தை
முன்னதாக மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த ட்ரம்பின் சீனப் பயணம், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வரும் கோடை காலத்தில் (ஜூன் அல்லது ஜூலை 2026) அந்தச் சந்திப்பை நடத்துவதற்கான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் அமெரிக்க-இஸ்ரேல் ஈரான் போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை சர்வதேச வர்த்தகத்தைப் பாதித்துள்ளதாக ஒப்புக்கொண்ட சீனா, இப்பிரச்சனையில் வாஷிங்டனுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருகின்றது.
அத்தோடு, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய வர்த்தக விசாரணைகளை அரசியல் சூழ்ச்சி எனச் சீனா விமர்சித்தாலும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரம்
கடந்த வாரம் பாரிஸில் அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹே லிஃபெங் இடையே நடைபெற்ற சந்திப்பு, ட்ரம்ப் – ஜி ஜின்பிங் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போர் மற்றும் வர்த்தகத் தடைகள் போன்ற கடுமையான சவால்கள் நிலவினாலும் 2026 ஆம் ஆண்டை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மைல்கல் ஆண்டாக மாற்ற சீனா விரும்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் வருகை உறுதி செய்யப்படும் பட்சத்தில், அது உலகளாவிய பொருளாதாரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் வர்த்தகப் போரைத் தவிர்ப்பது ஆகிய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

