Last Updated:
டெல்லியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் ஏற்கனவே மோசமடைந்து வருகிறது. நடப்பு பருவத்தில் முதல்முறையாக திங்கள்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 312 ஆகப் பதிவாகி, மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
இதனால், நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகள், செவிலியர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார மையங்கள், முதியோர் இல்லங்களில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகளும் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த உச்சநீதிமன்றம் இது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


