Last Updated:
தொழில்நுட்ப வசதிகள் எளிதில் கிடைக்காத எளிய மக்களுக்கும் AI பலன்களைக் கொண்டு சேர்ப்பது குறித்து உலக வங்கியுடன் இணைந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முறைப்படுத்துவது குறித்த கலந்தாய்வு அறிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த வரைவு அறிக்கை, எதிர்காலத்தில் இந்தியாவில் AI தொழில்நுட்பத்தைச் சீராக நிர்வகிப்பதற்கான அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, இணையவழி அச்சுறுத்தல்களைத் (Cybersecurity threats) தடுப்பது மற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfakes) போன்ற போலி உருவாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பது ஆகியவற்றுக்கு இந்த முறைப்படுத்தல் வரைவில் முக்கியக் கவனம் செலுத்தப்படும்.
AI தொழில் நுட்பத்தின் நன்மைகளும் தீமைகளும் இதில் விரிவாக ஆராயப்பட்டு, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இதன் பயன்கள் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
மேலும், விவசாயத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டங்கள் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் மகசூல் 40% வரை அதிகரித்துள்ளதோடு, நீர் நுகர்வு மற்றும் உரங்களின் தேவையும் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், காசநோயை துல்லியமாகக் கண்டறியும் மருத்துவ முறைகளிலும், கல்விச் சூழலை மேம்படுத்தும் கருவிகளிலும் AI வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு AI சார்ந்த கல்வித் திட்டத்தை (AI-focused curriculum) உருவாக்குவது குறித்துத் தொழில் துறையினரிடமிருந்து வந்த முன்மொழிவு, மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களை மேம்படுத்தக் கல்வி அமைச்சகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.
தொழில்நுட்ப வசதிகள் எளிதில் கிடைக்காத எளிய மக்களுக்கும் AI பலன்களைக் கொண்டு சேர்ப்பது குறித்து உலக வங்கியுடன் இணைந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சமூகம், விவசாயம், மருத்துவம் மற்றும் கல்வியில் AI அதிகளவில் பயன்படுத்தப்படும்போது, நாடு முழுவதும் அதன் நன்மைகள் பெருமளவில் பெருகும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


