டிரம்ப்க்கு ஆட்டம் காட்டும் சீனா.. தங்கத்தை மலை மலையாய் வாங்கி குவிப்பு.. இந்தியா ஒரு படி மேல்!
அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கடந்த 10 வருடத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது, டாலர் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறவும், அமெரிக்க பேமெண்ட் முறைகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது.
இதன் வாயிலாக உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனா தனது நாணய மதிப்பைக் கட்டுப்படுத்த காலம் காலமாக வாங்கி வந்த அமெரிக்கப் பத்திரத்தை விற்பனை செய்து தங்கத்தை மலை மலையாய் வாங்கி குவித்துள்ளது. ஆனால் இந்திய முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டைத் தனது வர்த்தக நடைமுறை சார்ந்து எடுத்துள்ளது.

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் மத்திய வங்கிகளின் கருவூல இருப்பில் கடந்த 10 வருடத்தில் நடந்துள்ள மாற்றத்தைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூன் 2016 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் சீனா மத்திய வங்கி தனது அமெரிக்க அரசு பத்திரங்கள் மீதான முதலீட்டை 1185 பில்லியன் டாலரில் இருந்து 633.4 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசு பத்திரங்கள் மீதான முதலீட்டைச் சீனா 47 சதவீதம் குறைத்துள்ளது.
இதேவேளையில் தங்கத்தைப் பார்க்கும் போது சீனா 1,842.56 டன்களில் இருந்து 2,346.43 டன்னாக அதன் இருப்பை உயர்த்தியுள்ளது, இதன் மூலம் தங்கத்தின் இருப்பு 27.35 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகம் கொண்டு இருக்கும் நாடு என்பதால் அமெரிக்க அரசு பத்திரத்தை விற்றுவிட்டுத் தங்கத்தை அதிகளவில் வாங்கியது.
ஆனால் இந்தியா இதில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த 10 வருடத்தில் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசு பத்திரங்கள் மீதான முதலீட்டை 117.2 பில்லியன் டாலரில் இருந்து 186.4 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இதேபோல் தங்க இருப்பில் 557.77 டன் இருப்பில் இருந்து 880.51 டன்னாக அதிகரித்து தனது மொத்த இருப்பின் அளவை 57.86 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இந்தியா சீனாவுக்கு இணையாக உபரி ஏற்றுமதி இல்லாத காரணத்தால் தங்கத்திலும், அமெரிக்க அரசு பத்திரத்தில் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்து ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் சீனாவைப் போல் ஜப்பான் அமெரிக்கப் பத்திர முதலீட்டை 2.65 சதவீகமாக குறைத்துள்ளது, ஆனால் தங்க இருப்பை 10.55 சதவீதம் அதிகரித்துள்ளது.
இப்படி டாலரின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காகவே பிரிக்ஸ் மாநாட்டில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. அதாவது பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தில் இனி டாலரைப் பயன்படுத்தாமல் உள்நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் படிப்படிப்படையாக டாலர் ஆதிக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, பிரிக்ஸ் நாடுகள் இதற்கு முன்பு பிரிக்ஸ் நாணயம் என தனி நாணயத்தைக் கொண்டு வர முடிவு செய்தது, ஆனால் இதற்கான ஆலோசனைகளும், முடிவுகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. உலக நாடுகள் அடுத்தடுத்து டாலர் ஆதிக்கத்தில் இகுந்து விடுபடவும், அமெரிக்காவின் கடன் 40 டிரில்லியன் டாலரை எட்டியதால் அதன் அரசு பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
