டாடா சன்ஸ் அடுத்த தலைவர் யார்..? மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த ரகசிய கூட்டம்.. நோயல் டாடா உடன் வந்த 2 பேர்!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் சேர்மன் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் வெளியேறியுள்ள நிலையில் இப்பதவியில் அடுத்து யார் அமரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் மும்பையில் முக்கிய கூட்டம் மிகவும் ரகசியமாக நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
18ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் டாடா டிர்ஸ்ட் அமைப்பில் இருந்து போதுமான உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள முடியாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பலமுக்கியமான முடிவுகள் எடுக்கப்பட திட்டமிட்டு இருந்த நிலையில் டாடா குழும வரலாற்றில் முதல் முறையாக AGM கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள தாஜ் வெலிங்டன் மியூஸ் ரெசிடென்சஸில் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா தலைமையில் ரகசியமாக நடந்துள்ளது. டாடா சன்ஸ் விவகாரம் டெல்லி வரையில் சென்றுள்ள நிலையில் அடுத்த தலைவர் பதவியில் யாரை உட்கார வைக்க வேண்டும் என்பதை நோயல் டாடா தீவிரமாக விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இக்கூட்டத்தை நோயல் டாடா டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் டிரஸ்ட்டியாக இருக்கும் டேரியஸ் காம்பட்டா மற்றும் முன்னாள் எச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் ஆகியோர் சந்தித்தனர்.
சந்திரசேகரனுக்கு மீண்டும் சேர்மன் பதவி கொடுக்க வேண்டும் என டாடா சன்ஸ் நிர்வாக குழுவின் ஒரு பிரிவினர் கூறி வரும் வேளையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. மேலும் டாடா சன்ஸ் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்பதை இன்னும் முடிவு செய்யப்படதா நிலையில் இப்பதவிக்கு யார் போட்டிப்போடுவார்கள் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போதைய நிலையில் 3 பேர் போட்டிப்போட்டு வருகின்றனர். டாடா சன்ஸ் பதவிக்கு தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சிஇஓ – நிர்வாக இயக்குனராக இருக்கும் டிவி நரேந்திரன், டாடா குரூப் தலைமை நிதியியல் அதிகாரியான PB பாலாஜி, 3வது நபராக டாடா குடும்பத்தை சேர்ந்த, நோயல் டாடாவின் மகனான நெவில் டாடா-வும் இப்பதவிக்கு போட்டி போட்டு வருகிறார்.
அனுபவம், நீண்ட கால டாடா குழுமத்தில் பணியாற்றியவர் என்ற முறையில் 61 வயதான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவரான டிவி நரேந்திரன் தான் சரியான தேர்வாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதால் மீண்டும் நிர்வாக மாற்றம் வரும்.

