ஜோகூர் பாரு:
பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் அங்கத்துவ கட்சியான பாஸ் (PAS), தான் போட்டியிடாத தொகுதிகளில் பக்காத்தான் ஹரப்பானுக்கு (PH) வாக்களிக்க வேண்டாம் என்று தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் வியூக மாற்றம், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ் கட்சி தான் போட்டியிடும் 11 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளதால், ஜோகூரின் மொத்தம் உள்ள 56 தொகுதிகளில் சில முக்கியத் தொகுதிகளின் அரசியல் கணக்குகள் தலைகீழாக மாறியுள்ளன.
அரசியல் ஆய்வாளர்களால் உன்னிப்பாகக் கவனிக்கும் அந்த 8 முக்கியத் தொகுதிகளாக,
1. லாயாங்-லாயாங் (Layang-Layang)
இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் முத்தாலிப் அப்துல் ரஹிம், வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அம்னோவிலிருந்து விலகி பெர்சத்து (Bersatu) கட்சியில் இணைந்தார். இப்போது அவர் PN வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதி மக்களிடையே இவருக்குச் செல்வாக்கு இருந்தாலும், பாஸ் கட்சியின் தேர்தல் இயந்திரம் இவருக்கு ஆதரவாகச் செயல்படாது என்பதால் இவரது வெற்றி வாய்ப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. பாரிசான் நேஷனல் (BN) சார்பில் மசீசவின் (MCA) சுவா ஜியான் பூன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
2. புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
கடந்த 2022 மாநிலத் தேர்தலில், ஜோகூர் பெர்சத்து தலைவர் டத்தோ டாக்டர் சாஹ்ருதீன் ஜமால் 710 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கு வெற்றி பெற்றிருந்தார். இம்முறை பாஸ் கட்சியின் தேர்தல் இயந்திரத்தின் ஆதரவு இல்லாததால், இந்த மும்முனைப் போட்டியில் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள பெர்சத்து கட்சி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
3. எண்டாவ் (Endau)
வேட்புமனுத் தாக்கலுக்கு முன், எண்டாவ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அல்வியா தாலிப் பெர்சத்து கட்சியிலிருந்து விலகி அம்னோவில் இணைந்தார். தற்போது அவர் BN வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு பெர்சத்துவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், PN சார்பில் பாஸ் கட்சியின் ஹஸ்னுல் ஹக்கிமி ஹுசேன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்களோடு சேர்த்து இத்தொகுதி ஒரு சதுரங்கப் போட்டியைக் காண்கிறது.
4. மாச்சாப் (Machap)
அனைவரின் பார்வையும் மாச்சாப் தொகுதியின் மீதுதான் உள்ளது. ஏனெனில், ஜோகூர் BN தலைவரும், தற்காலிக மந்திரி பெசாருமான டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி இத்தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து PH கட்சியின் நூர் ஹஃபிஸ் ரோஸ்லான் நேருக்கு நேர் மோதுகிறார். கடந்த 2022 தேர்தலில், ஓன் ஹஃபிஸ் 6,543 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை ஜோகூரில் BN மற்றும் PH இடையே நேரடியாக நேரடிப் போட்டி நிலவும் 14 தொகுதிகளில் மாச்சாப்பும் ஒன்றாகும்.
5. புத்தேரி வாங்சா (Puteri Wangsa)
கடந்த 2022-இல், மூடா (Muda) கட்சி தனது தேர்தல் அறிமுகத்திலேயே இத்தொகுதியைக் கைப்பற்றியது. ஆனால், இம்முறை மூடா தலைவர் அமீரா ஆயிஷா போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக மூடா கட்சியின் ரஷிஃபா அல்ஜுனிட் போட்டியிடுகிறார்.
அதே வேளையில், PH கூட்டணி இங்கு பலத்த போட்டியைக் கொடுக்க முன்னாள் கல்வி அமைச்சரும் பி.கே.ஆர் (PKR) கட்சியின் முக்கியத் தலைவருமான டாக்டர் மஸ்லி மாலிக்கைக் களம் இறக்கியுள்ளது. இவர்களுடன் BN-இன் தியோ சியா லிங், பெர்சாமா கட்சியின் நிக்கோலஸ் பால் வின்சென்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளர் வாங் வீ சியோங் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
6. பாசிர் ராஜா (Pasir Raja)
மற்றொரு முன்னாள் அமைச்சரின் வருகையால் இத்தொகுதி சூடுபிடித்துள்ளது. BN சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அதாம் பாபா (64) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2008 முதல் 2018 வரை இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரை எதிர்த்து PH-இன் முகமது ஃபகாருதீன் முஸ்லிம் மற்றும் PN-இன் யுஹானிதா யுனான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
7. செங்காராங் (Senggarang)
இத்தொகுதியை BN-இடமிருந்து கைப்பற்ற, மக்களவையின் முன்னாள் துணைச் சபாநாயகர் டத்தோ ரஷித் ஹாஸ்னோனை (பெர்சத்து) PN களம் இறக்கியுள்ளது. BN சார்பில், கடந்த 2022-இல் 3,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யுஸ்லா இஸ்மாயில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர்களுடன் PH கட்சியின் ஓன் அபு பக்காரும் இணைந்து இந்த மும்முனைப் போட்டியை நிறைவு செய்கிறார்.
8. மஹ்கோத்தா (Mahkota)
கடந்த 2024 இடைத்தேர்தலில், BN வேட்பாளர் சையத் ஹுசேன் சையத் அப்துல்லா 20,648 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அப்போது ஒற்றுமை அரசாங்கத்தின் இணக்கத்திற்காக PH அங்கு போட்டியிடவில்லை. ஆனால், இந்த பொதுத் தேர்தலில் சையத் ஹுசேனை எதிர்த்து PH கட்சியின் டாக்டர் அகமத் ஜுஹான் முகமது ஜைன் மற்றும் பெர்சாமா கட்சியின் அப்துல் ஹமீத் அலி ஆகியோர் மும்முனைப் போட்டியில் களம் காண்கின்றனர்.



