Last Updated:
முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களின் பான் கார்டு மற்றும் டிமேட் கணக்கு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய பங்குச்சந்தையின் மிகப்பெரிய நிகழ்வான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (Jio Platforms Ltd) நிறுவனத்தின் ரூ. 30,213 கோடி மதிப்பிலான ஐபிஓ (IPO) விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஐபிஓ-வில் பங்குகள் ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்பை முதலீட்டாளர்கள் எவ்வாறு அதிகரிக்கலாம் மற்றும் அவர்கள் விண்ணப்பிப்பதற்கான பல்வேறு பிரிவுகள் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரண சில்லறை முதலீட்டாளர்கள் (Retail) மற்றும் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் (NII) பிரிவுகளுடன் தவிர, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக தனியாக ரூ. 3,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கியுள்ளது.
அக்டோபர் 14, 2026 என்ற கட்-ஆஃப் தேதிக்கு முன்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் இந்தப் பிரிவில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இந்தப் பிரிவில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை விண்ணப்பிக்கலாம். இது வழக்கமான சில்லறை முதலீட்டாளர் பிரிவுக்குக் கூடுதலாக வழங்கப்படும் ஒரு தனி வாய்ப்பாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியான ஊழியர்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை விண்ணப்பிக்க முடியும்.
ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்ய விரும்பும் தனிநபர் முதலீட்டாளர்கள் சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவைப் பயன்படுத்தலாம். ரூ. 2 லட்சத்திற்கு மேல் அதிக தொகையை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் NII பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே பான் (PAN) கார்டைப் பயன்படுத்தி சில்லறை பிரிவு மற்றும் NII பிரிவு இரண்டிலும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியாது.
தகுதியுள்ள முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பதன் மூலம் பங்கு ஒதுக்கீடு பெறும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்.
உதாணரமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) பங்குகளை வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளர், தனது பான் கார்டு மூலம் ‘பங்குதாரர் ஒதுக்கீடு’ (Shareholder Quota) மற்றும் ‘சில்லறை பிரிவு’ (Retail Category) ஆகிய இரண்டிலும் தனித்தனியாக இரண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இது இரு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் சட்டப்பூர்வமாக வாய்ப்புகளை அளிக்கிறது. அதேவேளையில், ஒரே பிரிவில் ஒரே பான் எண்ணைப் பயன்படுத்தி பல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் (Duplicate Applications) அவை ரத்து செய்யப்படும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களின் பான் கார்டு மற்றும் டிமேட் கணக்கு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ASBA அல்லது UPI மூலம் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத் தொகை உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படாமல் தற்காலிகமாக முடக்கி (Block) வைக்கப்படும். பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே தொகை பிடிக்கப்படும்.


