Last Updated:
உலகின் 4 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியது. இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக, தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா, உலகின் 4 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் 10 ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைமை செயல் அதிகாரி BVR சுப்ரமணியம், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், நாணய மாற்று விகிதங்களைப் பொறுத்து அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இந்தியா 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்றார்.
இந்த தரவுகளை ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் வழங்கி இருப்பதாக கூறிய அவர், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 340 லட்சம் கோடியாக உள்ளது. இதனால், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய வர்த்தக விதிகளை அமைப்பது, காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் இந்தியாவின் கை ஓங்கி இருக்கும். தொழில்முனைவோருக்கான சாதகமான சூழலும் ஏற்படும் என்பதால், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். குறிப்பாக, பசுமை எரிசக்தி, சேவைகள் போன்ற துறைகள் அதிக வருவாயை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி வருவாய் அதிகரிப்பு, செலவழிக்கும் திறன் உயர்வு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை சாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதாவது, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2025 நிதியாண்டில் 6.2 சதவிகிதமாகவும், 2026-ல் 6 புள்ளி 3 விழுக்காடாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் தனிநபர் வருமானம் வளர்ந்த நாடுகளை விட மிகக்குறைவாகவே உள்ளது என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார். சமத்துவமின்மை சவாலாக இருப்பதாக கூறிய அவர், சுகாதாரம், கல்வி மற்றும் உள் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவைப்படுப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு முந்தைய இடத்தில் உள்ள ஜெர்மனியின் பொருளாதாரம் 4 புள்ளி 74 டிரில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 404 லட்சம் கோடியாகும். அதே போன்று, இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பொருளாதார மதிப்பு, ஆயிரத்து 637 லட்சம் கோடியாக உள்ளது. 30 புள்ளி 51 டிரில்லியன் டாலர் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயரித்து 598 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு, இந்தியாவை விட 7 மடங்கு அதிகமாகும்.


