வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இதன்மூலம் அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பாக, இந்த குற்றச்சாட்டுகளை SLPP நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்.
குளியாப்பிட்டியவில் நேற்று சனிக்கிழமை (22) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, ஊழலை ஒழிப்பது குறித்து ஜனாதிபதி தொடர்ச்சியாகப் பேசி வருவதாகக் குறிப்பிட்டு, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் அந்த அர்ப்பணிப்பை நிரூபிக்குமாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜனாதிபதி திருடர்களைப் பிடிப்பது குறித்தும், நேர்மையை உறுதிப்படுத்துவது குறித்தும் பேசுகிறார். அந்த அர்ப்பணிப்பைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும். ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ விமர்சித்தார்.
விவசாயிகள் குறைந்த நெல் விலை காரணமாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதேநேரம் நுகர்வோர் அதிக அரிசி விலை காரணமாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.
அரசு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் இணையவழி (சைபர்) சம்பவங்களை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்தும் விமர்சித்த நாமல் ராஜபக்ஷ, அதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
“அரசாங்கம் மோதல்களைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்காக வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்களே தவிர, மேலும் அரசியல் மோதல்களை அல்ல” என்றும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், துறைமுக நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவோர் அதிகாரமும் இல்லை என்று வாதிட்டார்.
அத்துடன், தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தி, அதன் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

