கோலாலம்பூர்:
சபா, செம்பூர்ணாவிலுள்ள பிரபல ரிசார்ட் ஒன்றின் அறைக்குள் புகுந்து, 25 வயது சீன நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக 18 வயது உள்ளூர் இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜாலான் கமீரியிலுள்ள ஒரு ரிசார்ட்டில் சனிக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை 3.00 மணியளவில் இந்த அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செம்பூர்ணா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டென்டண்ட் டான் ஹியாப் வா தெரிவித்தார்.
அந்தச் சீனப் பெண் தனது அறையில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறைக்குள் இருப்பதை உணர்ந்துள்ளார்.
“சந்தேகத்திற்குரிய அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவருடைய ஆடைகளைக் களைய முயன்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பலத்த போராட்டம் ஏற்பட்டுள்ளது.” என்று அவர் சொன்னார்.
அந்த இளைஞரின் பிடியிலிருந்து தப்பித்து அறையை விட்டு வெளியேறிய அப்பெண், அருகிலிருந்த புதர்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் காலை வேளையில் ரிசார்ட் ஊழியர் ஒருவரால் அவர் மீட்கப்பட்டார். தான் தப்பியோடுவதைத் தடுக்க அந்த இளைஞர் தனது தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தள்ளியதில் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய செம்பூர்ணா குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த தனிப்படையினர், அதே நாள் இரவு 8.00 மணியளவில் 18 வயதுடைய அந்த சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட இளைஞர் மீது சட்டவிரோதமாக வீட்டிற்குள் நுழைதல் (பிரிவு 448) மற்றும் பெண்மையைக் காயப்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்துதல் (பிரிவு 354) ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விசாரணை நிலுவையில் இருப்பதால் பொதுமக்கள் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.



