கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ‘ஆட்டம் மியூசிக் & கல்சரல் ஃபெஸ்டிவல் 2026’ (Autumn Music & Cultural Festival 2026) கலைத் திருவிழாவை முன்னிட்டு, சுங்கை வாங் பிளாசா முன்பாக உள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலை தற்காலிகமாக மூடப்படுவதாகக் கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) ஷாப்பிங் வளாக நிர்வாகமும் கூட்டாக அறிவித்துள்ளன.
விழாவிற்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 24) இரவு 10 மணி முதலே சாலை மூடும் பணிகள் தொடங்கும். தொடர்ந்து, செப்டம்பர் 25 முதல் 27 வரை மூன்று நாட்களுக்கு இச்சாலையில் முழுமையான போக்குவரத்துத் தடை அமலில் இருக்கும். திருவிழா நிறைவடைந்த பின், செப்டம்பர் 28-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குச் சாலை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும்.
இக்காலக்கட்டத்தில் அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் நெரிசலைத் தவிர்க்க புக்கிட் பிந்தாங் MRT மற்றும் மொனோரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



