அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் அவரது உயிருக்கு ஆபத்தாகும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) அன்று இடம்பெற்ற ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அனோஜனை விடுவிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது. இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை நாங்கள் மேற்கொண்டு வந்துள்ளோம். அவர் மன்னிக்கப்பட்டு தனது குடும்பத்தினருடன் விரைவில் இணைய வேண்டும் என நாங்கள் பிராத்திக்கிறோம்.
அதேநேரம் அனோஜனை விடுதலை செய்துகொள்ள நாங்கள் எடுத்துவரும் முயற்சி வெற்றியளிப்பதற்கு சில உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இலங்கையிலிருந்து பிரதி சபாநாயகர் தலைமையில் ஒரு குழு சவுதி அரேபியாவுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. என்றாலும், வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான ஒரு உயர்மட்டக் குழு சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சரை இது தொடர்பில் சந்திப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனோஜனுக்குப் பொது மன்னிப்பு வழங்கக்கோரி, சவுதி மன்னருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வெளிவிவகார அமைச்சர் எடுத்துக்கொண்டு, அதனை சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சரிடம் ஒப்படைப்பதன் மூலம்தான் அது உரிய முறைப்படி, உரிய நேரத்துக்கு மன்னருக்குச் செல்லும். சவுதி மன்னர் மன்னிப்பு வழங்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். வேறு சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க முடியுமாக இருந்தாலும், விடுதலை செய்துகொள்வதற்கு இருக்கும் மிகச் சிறந்த வழி இந்த வழியாகும்.
எனவே, அரசாங்கம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் அவரது உயிருக்கு ஆபத்தாகும். அதனால், இது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

