கோலாலம்பூர்:
சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், அவர்களின் சுலபமான போக்குவரத்திற்கும், சமூக உறவுகளை வலுப்படுத்தவும் 10,000 இளைஞர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் சிறப்புத் திட்டத்தை சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தொடக்கிவைத்துள்ளார்.
இத்திட்டத்தின் தொடக்க விழாவில் முதற்கட்டமாக 500 இளைஞர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதியின் சுதந்திர தினக் கொண்டாட்டத் தொடக்கம் மற்றும் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய ரமணன், “இது வெறும் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல; இளைஞர்களின் எதிர்காலத்திற்கான முதலீடு. இளைஞர்கள் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதோடு, குடும்பப் பிணைப்பு, அண்டை வீட்டாருடனான உறவு மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்த சைக்கிள் பயணத்தைப் பயன்படுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அறிவிக்கப்படும் திட்டங்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் உடனடியாகச் செயல்படுத்தப்படுவதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த சான்றாகும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சி என்பது பெரிய உள்கட்டமைப்புகளில் மட்டுமல்லாமல் கல்வி, இளைஞர் மேம்பாடு, நலன்புரி உதவிகள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில்தான் உள்ளது. மடானி (Madani) அரசாங்கம் எந்தவொரு பிரிவினரையும் கைவிடாது என அவர் உறுதியளித்தார்.
இந்த இலவச சைக்கிள்கள் கட்டம் கட்டமாகத் தொகுதி முழுவதும் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரமணன், சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளும் இளைஞர்கள் சாலையில் செல்லும்போது தங்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளித்து, அவற்றைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.



