Last Updated:
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதால் பல வகை பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி என்றாலே புத்தாடைகளும், இனிப்புகளும் நினைவுக்கு வந்தாலும், பட்டாசுகள்தான் பண்டிகையின் கொண்டாட்டத்தை முழுமையாக்குகின்றன. இந்தியாவின் 90 சதவீத பட்டாசுத் தேவையைப் பூர்த்தி செய்யும் சிவகாசியில், தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிவகாசியில் உள்ள சுமார் 1,200 பட்டாசு ஆலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க வேண்டிய உற்பத்திப் பணிகள், தொடர் மழை காரணமாக டிசம்பர் இறுதியில்தான் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, போர் பதற்றம் காரணமாக ரசாயன மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், தொடர் வெடி விபத்துகளைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளில் விதிமீறல்கள் காரணமாக ஏராளமான ஆலைகள் மூடப்பட்டதும் உற்பத்திப் பாதிப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் வழக்கமான உற்பத்தியைக் காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 30 சதவீதம் குறைவாகவே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறுவர்கள் விரும்பி வெடிக்கும் புஸ்வானம், தரைச்சக்கரம் மற்றும் வானில் வண்ணஜாலம் காட்டும் பேன்சி ரக பட்டாசுகளுக்குத் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பட்டாசுத் தொழிலில் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் கிடைப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வேறு தொழில் வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், பட்டாசுகளின் விலை இந்த ஆண்டு 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஆன்லைன் விற்பனை உயர்வு காரணமாக சிவகாசியில் நேரடி விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் விலை உயர்வை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தாமல், தங்களது லாபத்தில் 15 சதவீதம் வரை குறைத்துக் கொண்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்தி குறைந்ததால் வெளியூர்களில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கான மொத்த விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த ஆண்டு சரவெடி பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், போதிய அளவில் சரவெடி பட்டாசுகள் கிடைக்கவில்லை என்றும், அடுத்த ஆண்டு சரவெடி பட்டாசுகளை முக்கியமாகக் கொண்டு விற்பனையை அதிகரிக்க முடியும் என நம்புவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


