
சிறையிலுள்ள பௌத்த பிக்குகளைக் கையாளும் நடைமுறைகள் மற்றும் சட்டங்களைத் திருத்தி பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களை மீளாய்வு செய்து, புதிய நிலையான கட்டளைகள் மற்றும் விதிமுறைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் இக்குழு அமைக்கப்படவுள்ளது.
தற்போதைய சட்ட ஏற்பாடுகளை விரிவாக ஆராய்ந்து, திருத்தங்களுக்கான பரிந்துரைகளை இரண்டு வார காலத்துக்குள் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை அடுத்து, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (08) பிற்பகல் மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இதில் பௌத்த பிக்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தற்போதைய சட்டக் கட்டமைப்பு குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, 1877ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அதன் கீழ் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள், நிலையான கட்டளைகளுக்கு அமையவே சிறைச்சாலை நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
குறித்த பொதுவான சட்டக் கட்டமைப்பில் கைதிகள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பௌத்த பிக்குகள் தொடர்பில் பிரத்தியேக ஏற்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்து வரப்படும்போது ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு உட்படுவதால் இந்நிலைமை தீவிரமடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அண்மைய சம்பவம் பௌத்த மக்களிடையேயும் மகா சங்கத்தினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
நடைமுறையிலுள்ள சட்டங்கள் தற்காலத்துக்குப் பொருத்தமற்றதாகக் காணப்படின், அவற்றை முறையான சட்டவாக்கப் பொறிமுறையினூடாகத் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட வழக்குகளுக்காகத் தனித்தனியான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சட்டம் என்பது தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அமைய மாற்றப்படக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, குறிப்பிட்ட ஒரு பிக்குவை முன்னிலைப்படுத்தி அன்றி, சிறைச்சாலைக் கட்டமைப்பு முழுவதற்கும் பொருந்தும் வகையில் பொதுவான புதிய விதிகள் இயற்றப்பட வேண்டும் எனவும், பிக்குகள் காவலில் வைக்கப்படும் விதம் மற்றும் அவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் ஆகிய இரு விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

