Last Updated:
போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வாடிகன் தேவாலயம் அறிக்கை வெளியிட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய், வைரஸ், பாக்டீரியா, பூச்சை ஆகிய தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், பின்னர் இரண்டு நுரையீரல்களும் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.
சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தை பாதித்துள்ளதாகவும் அதன் பக்க விளைவாக உடல் உறுப்புகளின் செயல்திறனை குறைத்து மரணத்தை ஏற்படுத்தும் செப்சிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ள வாடிகன் தேவாலயம், அதிக ஆக்சிஜன் தேவைப்படுவதால் செயற்கை சுவாசமும் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ரத்த மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரான்சிஸ் குணமடைய நேரம் எடுக்கும் என்றும், அவர் இன்னும் வாடிக்கனில் தனது நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகளுடன் வாழ வேண்டியிருக்கும் என்றும் ஜெமெல்லி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போப் பிரான்ஸிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதற்காக அவரை வாடிகன் வெளியுறவுச் செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் மற்றும் முதன்மை ஆலோசகர் மருத்துவமனையில் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது.
ஆனால் இதை மறுத்துள்ள Cardinal Pietro Parolin, போப் பிரான்சிஸ் விழிப்புடன் இருப்பதாகவும், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டதாகவும் விளக்கம் தந்தார். பிரான்சிஸ் ஒரு ராஜினாமா கடிதத்தை எழுதி வைத்துள்ளதாகவும் ஒரு வேளை போப் பிரான்ஸிஸ் சுயநினைவை இழக்க நேரிடும் பட்சத்தில் அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸை பொறுத்தவரை, 2013 ஆம் ஆண்டு 16ஆது போப் பெனடிக்ட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டவர். தனது 21 ஆம் வயதிலேயே pleurisy என்ற அழற்சியால் பாதிக்கப்பட்ட போப்பிற்கு அப்போதே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவர், 2023 மார்ச்சில் தொடந்து மாதம் 3 நாட்கள் உள்பட தனது வாழ்நாள் முழுவதும் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில், மோசமான உடல் நிலையால் தொடர்ந்து 2 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பங்கேற்காத நிலையில், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் அவர் உடல்நலம் தேற பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.
February 24, 2025 7:47 AM IST


