Last Updated:
லூதியானாவில் திருடப்பட்ட சுசூகி பலேனோ காரை ஓட்டி தப்பிய திருடன், போலீசும் பொதுமக்களும் சேஸிங் செய்து பிடித்தனர், சிசிடிவி காட்சி பரபரப்பு.
பஞ்சாபில் காரை திருடிக் கொண்டு ஓடியவரை போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அடிக்கடி கார் திருடு போவதாக புகார்கள் எழுந்துள்ளன. புகாரின்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வெள்ளை நிற சுசூகி பலேனோ கார் வந்துள்ளது. போலீசார் நிற்பதை கண்டதும் காரை ஓட்டி வந்தவர் யு-டர்ன் போட்டுள்ளார். அது திருட்டுக் கார் என்பதை அறிந்து கொண்ட போலீசார் சேஸிங் செய்துள்ளனர்.
போலீசார் விரட்டுவதை தெரிந்து கொண்ட திருடன், காரை சந்து பொந்தெல்லாம் ஓட்டியுள்ளார். கடைசியாக குறுகலான தெருவுக்குள் சென்றதும் பொதுமக்கள் தடுத்துள்ளனர். அதை சற்றும் பொருட்படுத்தாத திருடன் பொதுமக்களை இடித்து தள்ளியபடி முன்னோக்கி சென்றுள்ளார். ஆனால், தொடர்ந்து முன்னேற முடியாததால் காரை வேகமாக ரிவர்சில் எடுத்துள்ளார். அதில், நெருவோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இடித்து சின்னாபின்னமாக்கி உள்ளார்.
ரிவர்சில் ஓட்டிச் சென்ற திருடன், மீண்டும் மீண்டும் முன்னும் பின்னும் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி பொதுமக்களுக்கு உயிர் பயம் காட்டியுள்ளார். அந்த நேரம் போலீசாரும் அங்கு வந்ததும், கூட்டாக திருடனை பிடிக்க முயற்சித்துள்ளனர். இருபுறமும் அணை கட்டியும் அடங்காத திருடன் ரிவர்சில் வேகமாக ஓட்டிச் சென்ற கார் கரண்ட் கம்பத்தில் மோதி நின்றுள்ளது. இதையடுத்து, வசமாக சிக்கிய திருடனை பொதுமக்கள் பொளந்தெடுத்துள்ளனர்.
சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேஸிங்.. திருட்டு காரில் சீறிப் பாய்ந்த திருடன்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!


