International
oi-Hema Vandhana
பெய்ஜிங்: கடலில் வாழும் ஒரு சின்னஞ்சிறிய உயிரினம். வயதாகிவிட்டாலும் மீண்டும் இளமையான நிலைக்கு திரும்ப முடியுமாம்! அதுவும் ஒருமுறை அல்ல, பலமுறை இப்படி தன்னுடைய வாழ்க்கை சுழற்சியையே மாற்றிக்கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த உயிரினம்தான் ‘இம்மார்டல் ஜெல்லி ஃபிஷ்” (Immortal Jellyfish). இது எப்படி இளமையாக திரும்புகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.
இம்மார்டல் ஜெல்லி ஃபிஷ் என்பதன் அறிவியல் பெயர் Turritopsis dohrnii. பொதுவாக உயிரினங்கள் பிறந்து, வளர்ந்து, முதிர்ச்சியடைந்து இறந்து விடும்.. இதுதான் இயற்கை..

ஜெல்லி மீன்
ஆனால், இந்த ஜெல்லி மீன் அப்படி கிடையாது.. சில சூழ்நிலைகளில் தனது வாழ்க்கை சுழற்சியையே பின்னோக்கி திருப்பும் திறன் இருக்கிறதாம்.. அதாவது உடலில் காயம் ஏற்பட்டாலோ, உணவு பற்றாக்குறை போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலோ, வளர்ந்த நிலையில் இருந்து மீண்டும் ஆரம்பகட்ட நிலைக்கு திரும்ப முடியும்.
அப்போது அதன் குடை போன்ற உடல் சுருங்கி, செல்களின் திரள் போன்ற நிலைக்கு மாறுகிறது. பிறகு “பாலிப்” (Polyp) என்ற ஆரம்பகட்ட நிலையை அடைந்து, அங்கிருந்து மறுபடியும் வளர முடியும்.. அதனால்தான் இதை “சாகாத ஜெல்லி மீன்” என்று அழைக்கிறார்கள்.. அதுக்காக எல்லா சூழ்நிலைகளிலும் இது உயிர் பிழைத்துவிடும் என்று அர்த்தமில்லை.
“சாகாத ஜெல்லி மீன்”
மற்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு இரையாகலாம்… சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் இறந்து போகலாம்.. ஆய்வகங்களில்கூட எல்லா ஜெல்லி மீன்களும் வெற்றிகரமாக மீண்டும் இளமையான நிலைக்குத் திரும்புவதில்லை. எனவே ஒரு சில சூழ்நிலைகளில் மட்டுமே இப்படி ரிவர்ஸ் நிலைக்கு போய்விடும்.
அதேசமயம், இந்த ஜெல்லி மீன் மனிதர்களைப் போல முதுமையடைந்து, பிறகு இளமையாக மாறுகிறது என்று எளிமையாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், உயிரினங்களின் செல்கள் வயதான பிறகும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள முடியுமா என்ற முக்கியமான கேள்விக்கு விடை தேடுவதில் இது விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
வியப்பை தரும் ஜெல்லி மீன்கள்
இந்த ஜெல்லி மீனின் ஸ்பெஷலே, உடலில் இருக்கும் சில செல்களால் தங்களுடைய வேலையை மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, ஏற்கனவே வளர்ந்த செல்கள் வேறு வகையான செல்களாக மாறி, அதன் உடல் மீண்டும் வளர உதவுகின்றன. அதனால்தான் இந்த ஜெல்லி மீன் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஜெல்லி மீன் 1883ம் வருடம் இத்தாலியின் நேபிள்ஸ் வளைகுடா பகுதியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதன் தனித்துவமான திறன், அடுத்தடுத்த ஆய்வுகளில்தான் விஞ்ஞானிகளுக்கே தெரியவந்ததாம்..
இப்போது விஞ்ஞானிகள் இதன் மரபணுக்களை ஆராய்ந்து வருகிறார்கள். குறிப்பாக, உடலில் சேதமடையும் டிஎன்ஏவை எப்படி சரிசெய்கிறது, செல்களை எப்படி பாதுகாக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் மனிதர்களின் முதுமை குறித்தும் புதிய தகவல்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
மனிதர்களுக்கும் உதவுமா?
இந்த ஜெல்லி மீன் தன்னுடைய செல்களை எப்படி புதுப்பித்துக்கொள்கிறது என்பதை தெரிந்துகொண்டால், மனிதர்களின் வயதான செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் பகுதிகளை சரிசெய்யவும் புதிய வழிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால், இதன் மூலம் மனிதர்களின் வயதை தலைகீழாக மாற்றிவிடலாம் என்றோ, முதுமையை தடுத்து நிறுத்தும் சிகிச்சை கிடைத்துவிட்டது என்றோ சொல்ல முடியாது. இதன் மரபணு செயல்பாடுகளை மனிதர்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பதை அறிய இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்.
இருந்தாலும், இயற்கையின் இந்த சின்னஞ்சிறிய உயிரினம், மனிதர்களின் முதுமை குறித்த அறிவியல் புரிதலுக்கு புதிய கதவுகளை திறக்குமா? அதற்கான விடையை எதிர்கால ஆய்வுகள்தான் சொல்ல வேண்டும்…!!!

