விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
‘கிரிஷ் டிரான்ஸ்வேர்க் கொழும்பு’ தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
கிரிஷ் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த இடையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எயார்பஸ் வானூர்தி கொள்முதல் ஊழல் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இன்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
எனவே, அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதைக் கருத்திற் கொண்டு, கிரிஷ் ஒப்பந்த வழக்கையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

