2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 93-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 39 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது எளிமையான விசா நடைமுறைகள் மூலம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இது அண்மைக்கால நிலையை விட முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், ஒரு காலத்தில் இருந்த நிலையிலிருந்து இன்னும் பின்தங்கியெ இருப்பதாக கூறப்படுகிறது.
199 நாடுகளின் கடவுச்சீட்டுகள்
ஒரு இலங்கையர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியவோ, கல்வி கற்கவோ அல்லது வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவோ முனையும்போது, அவர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை இந்தத் தரவரிசை பிரதிபலிக்கிறது.

Image Credit: Publishing Facts
சர்வதேச வான்வழி போக்குவரத்து சங்கத்தின் தரவுகளைக் கொண்டு 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஒப்பிட்டுத் தயாரிக்கப்படும் இந்தக் குறியீடு, ஒரு பயணி முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குள் நுழைய முடியும் என்பதை அளவிடுகிறது.
ஒரு நாட்டின் தரவரிசை குறையும் போது, அந்த நாட்டுப் பயணி சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களின் அளவு அதிகரித்து, பயண சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
இலங்கையின் இந்தத் தற்போதைய நிலை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல, கடந்த இருபது ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் இலங்கை கடவுச்சீட்டின் வலிமை படிப்படியாகச் சரிவடைந்து வந்துள்ளது.
தரவரிசையில் ஏற்பட்ட மாற்றங்கள்
குறிப்பாக, 2006 ஆம் ஆண்டில் 74-வது இடத்தில் இருந்த இலங்கை, அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிவைச் சந்தித்து 2011-ல் 92-வது இடத்தையும், 2012-ல் 96-வது இடத்தையும் அடைந்தது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும் கூட இந்த வீழ்ச்சி தொடர்ந்ததுடன், 2015 ஆம் ஆண்டில் ஒரே வருடத்தில் 101-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் அதிகரித்த புலம்பெயர்வு ஆகிய காரணங்களால் 2021 ஆம் ஆண்டில் இலங்கை தனது வரலாற்றிலேயே மிகக் குறைந்த தரவரிசையான 107-வது இடத்தைப் பதிவு செய்தது.
அதன்பின்னர் மெதுவான மீட்சியை நோக்கி நகர்ந்து வரும் இலங்கை, 2024 மற்றும் 2025-ல் 96-வது இடத்தில் இருந்து தற்போது 2026-ல் 93-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான சிறந்த நிலையாக இருந்தாலும், கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கை தனது உலகளாவிய பயண வலிமையில் சுமார் 20 இடங்களை இழந்துள்ளமையையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

