Last Updated:
தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே இவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று சாஃப் பேங்க் (SoftBank) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மசாஜோஷி சன் (Masayoshi Son) எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியைத் தொடர்ந்து ஆதரித்து வந்த 69 வயதான ஜப்பானிய பில்லியனர் மசாஜோஷி சன், தற்போது ‘சூப்பர் டேஞ்சரஸ் ஏஐ’ (Super Dangerous AI) எனப்படும் மிகவும் ஆபத்தான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய மாதங்களில் ஏஐ மாடல்கள் தொடர்பான பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் இணைந்து இந்த ஆற்றல்மிக்க தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாகப் புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் ஏஐ முன்னேற்றங்கள் குறித்து எப்போதும் நேர்மறையான கருத்துகளைப் பகிர்ந்து வரும் சாஃப்ட்வேங்க் சி.இ.ஓ மசாஜோஷி சன், இம்முறை மாறுபட்ட ஒரு எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போது, அது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபகாலமாக ஏஐ மாடல்கள் சார்ந்த தரவுப் பாதுகாப்பு மீறல்கள் (Security Breaches) உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் சூழலில் இவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
மிகவும் சக்திவாய்ந்த ஏஐ மாடல்களின் சாத்தியமான தீங்குகளைத் தடுக்க உலகளாவிய அளவில் கட்டுப்பாடுகளும் வழிகாட்டுதல்களும் அவசியம் என்று சன் வலியுறுத்தியுள்ளார். தனிப்பட்ட நாடுகளோ அல்லது நிறுவனங்களோ மட்டுமே இதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஏஐ அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையை உறுதிசெய்யும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்திலும், பல்வேறு தொழில்துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதோடு, எதிர்காலத்தில் மிக முக்கியப் பங்கையும் வகிக்கவுள்ளது. எனினும், அதன் அசுர வளர்ச்சி அளிக்கும் நன்மைகளுடன் சேர்த்து, அது உருவாக்கக்கூடிய அச்சுறுத்தல்களையும் நாம் புறக்கணித்துவிட முடியாது என்பதைத் தனது எச்சரிக்கை மூலம் மசாஜோஷி சன் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே இவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.


