கோலாலம்பூர்:
சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே லேகூன் தீம் பார்க்கில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபத்துக்குள்ளான ‘ரோலர் கோஸ்டர்’ சவாரி, விசாரணை நிறைவடையும் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சன்வே லேகூன் நிறுவனம் (Sunway Lagoon Sdn Bhd) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
“எங்களது பூங்காவிற்கு வருகை தரும் அனைவரின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் உயர்மட்ட முன்னுரிமை அளிப்பதில் சன்வே தீம் பார்க்ஸ் நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த விபத்து தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்,” என அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்வதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது, 11 முதல் 44 வயது வரையிலான மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 22 பேர் அந்த ரோலர் கோஸ்டரில் பயணித்துக்கொண்டிருந்தனர். முன்னதாக, சன்வே குழுமத்தின் நிறுவனர் டான் ஶ்ரீ ஜெஃப்ரி சியா, இந்த விபத்தை உறுதிப்படுத்தி, நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



