சண்டாக்கான்:
சண்டாக்கான், கம்போங் கரமுந்திங், ஜாலான் பொகாராவில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 30 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
அதிகாலை 3:34 மணி அளவில் தீ விபத்து குறித்த அவசர அழைப்பு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு கிடைத்தது. தகவலறிந்தவுடன், தீயணைப்பு நிலையத் தலைவர் ஜிம்மி லாகுங் தலைமையில் 21 வீரர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 1.4 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்த இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மக்கள் நெருக்கம் மிகுந்த அப்பகுதியில், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் அருகிலிருந்த சுமார் 100 வீடுகள் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டன. இந்த மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை, ராயல் மலேசிய கடற்படை மற்றும் ரிலா (Rela) உறுப்பினர்களும் ஈடுபட்டனர்.
“இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம். காலை 7:00 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன,” என நிலையத் தலைவர் ஜிம்மி லாகுங் தெரிவித்தார்.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




