Last Updated:
கேரளா பென்ஸ் கார் விபத்தில், விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை (கூடுதல் மாவட்ட நீதிபதி) தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.
கேரளாவில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்தது சர்ச்சையான நிலையில், தனது மகன் வாகனத்தை இயக்க்போது தான் உறங்கிக் கொண்டிருந்ததாக நீதிபதி விளக்கமளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரனல்லூரில் கடந்த 25 ஆம் தேதி அதிகாலை ஸ்கூட்டர் மீது பென்ஸ் கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற பாலகிருஷ்ணன் என்ற நபர் உயிரிழந்தார். விசாரணையில் காரை ஓட்டி வந்தது, கூடுதல் மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் என்பது தெரியவந்தது. விபத்தைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையும், காரின் உரிமையாளருமான கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனுவில், தனது மகன் தங்களுக்குத் தெரியாமல் காரை எடுத்ததாகவும், அந்த நேரத்தில் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தனது மகன் விபத்தில் சிக்கியது பற்றி தொலைபேசி அழைப்பின் மூலமே தான் அறிந்து கொண்டதாகவும் நீதிபதி விளக்கமளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


