Last Updated:
பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூருவுடன் பஞ்சாப் அணி நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 2 ஆவது தகுதி சுற்றுப் போட்டியில், மும்பையை பந்தாடிய பஞ்சாப் அணி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே ஆர்சிபி இறுதிப் போட்டிக்குச் சென்ற நிலையில், அதனுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மல்லுக்கட்டின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்த சூழலில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சுமார் இரண்டே கால் மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாத நிலையில், மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 44 ரன்களும், பேரிஸ்டோ 38 ரன்களையும், நமன் தீர் 37 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஆனால், வதேராவுடன் கைகோர்த்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தனது கூலான அதிரடி ஆட்டம் மூலம், பஞ்சாப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
19 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை விளாசி 87 ரன்களை குவித்த ஷ்ரேயஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றி மூலம், ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடக்க உள்ளது.
இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணியை கொண்டு சென்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயஸ் பெற்றுள்ளார்.
Ahmedabad,Gujarat
June 02, 2025 8:59 AM IST


