Last Updated:
டெல்லி CJP போராட்டத்தில் 2,500 குற்றப்பின்னணி கொண்டோர் கண்டறியப்பட்டனர். கூர்மையான ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் தகவல். 15 வழக்குகள் பதிவு. 18 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில், குற்றப்பின்னணி கொண்ட 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றபோது வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு டெல்லி காவல்துறையினர் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை நிறுவினர்.
அதன் மூலம், ஜூலை 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் போராட்டத்தில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கூட்டத்தில் ஊடுருவிய சிலர் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி காவல்துறையினரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று காலை 7.30 மணி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், டெல்லி கேட் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜந்தர் மந்தரைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை, கனரக சங்கிலிகளால் இணைக்கப்பட்ட தடுப்புகளை அங்கு நிறுத்தி உள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
கூர்மையான ஆயுதம்… 2500 பேரின் குற்றப்பின்னணி… டெல்லி CJP போராட்டம் குறித்து போலீஸ் பகிர்ந்த அதிர்ச்சி!


