குவால்கம் சிஇஓ அறிவிப்பால்.. பீதியில் இருக்கும் ஊழியர்கள்.. நவம்பர் மாதம் பறக்கும் பிங்க் ஸ்லிப்!
உலகமே தற்போது ஏஐ, செமிகண்டக்டர் துறையை நம்பி இயங்கி வரும் வேளையில், ஒரு சிப் தயாரிக்கும் நிறுவனமே பணிநீக்கத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பங்குச்சந்தை முதலீடுகளில் துவங்கி மத்திய மாநில அரசுகளின் கொள்கையில் வரையில் அனைத்திலும் ஏஐ, செமிகண்டக்டர் துறையை சார்ந்து இருக்கும் வேளையில் சமீபத்தில் முன்னணி ஏஐ நிறுவனங்கள் இணைந்து ஏஐ டெவலப்மென்ட்-ஐ தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை மனிதர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதன் பின்பு சீட்டுக்கட்டு சரிவது போல் ஏஐ துறையில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனையாக வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது, இதில் முக்கியமாக ஏஐ துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதன் மூலம் உரிய லாபம் வருகிறதா என்ற கேள்வி எழத் துவங்கியது.
இதேவேளையில் சிப் தயாரிப்பில் சீனா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல மெல்ல அதன் ஆதிக்கத்தை இழந்து வருகிறது. இதனால் உலகளாவிய ஏஐ, செமிகண்டக்டர் துறை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் சிப் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் முன்னோடியான குவால்கம் நிறுவனம் ஒவ்வொரு வருடம் ஊழியர்கள் திறன் அடிப்படையிலான மறுசீரமைப்பும் செய்யும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான வருடாந்திர ஊழியர் ஆய்வுப் பணிகள் முடிந்த உடன் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பணிநீக்கம் நவம்பர் மாதம் துவங்கும் என குவால்கம் நிறுவனத்தின் சிஇஓ Cristiano Amon ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் தெரிவித்தார். ஆனால் எத்தனை பேர், எந்த பிரிவில், எந்த நாட்டில் பணிநீக்கம் செய்யப்படும் என்பதை வெளியிடவில்லை.
இதுகுறித்து Cristiano Amon அனுப்பிய மெமோவில், நாம் இப்போது ஒரு வலிமையான திறன்மிக்க கலாச்சாரத்தை நிறுவனம் முழுக்க உருவாக்க முடிவு செய்துள்ளோம், இதனால் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து எட்ட முடியாத ஊழியர்களின் எதிர்காலத்தைத் தீர்மானம் செய்ய வேண்டிய முக்கியமான கட்டத்தில் நாம் இப்போது உள்ளோம் என தெரிவித்தார்.
குவால்கம் உலகளவில் 52000 ஊழியர்களைக் கொண்டு உள்ளது, இந்தியாவில் குவால்கம் பெங்களூர், ஹைதராபாத், சென்னை, நொய்டா, புனே, டெல்லி ஆகிய நகரங்களில் அலுவலகங்களை வைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

