நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் நாம் குபேர பகவானை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதற்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருள் இருந்தால் போதும். ஒரு லட்டு, டைமண்ட் கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை என்று எது இருந்தாலும் போதும். இதனுடன் ஒரே ஒரு ரூபாய் நாணயவும் இருக்க வேண்டும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்.
காலையில் எழுந்ததும் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. முகம் கை கால்களை கழுவி விட்டு அமைதியாக ஒரு இடத்தில் வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு அமரும் பொழுது தரையில் விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். வலது கையில் இனிப்பையும் அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து இடது கையால் மூடிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய நெஞ்சுக்குழியில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு குபேர பகவானின் மந்திரமான “ஓம் கும் குபேராய நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். பிறகு குபேரரின் துதியை ஒரு முறை கூறிவிட்டு குபேர பகவானிடம் செல்வ செழிப்பு உயர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை அன்றைய தினம் நாம் செலவு செய்யக் கூடிய பணத்துடன் வைத்துவிட்டு இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும்.
அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அன்றைய தினமே அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்தின் உண்டியலில் போட்டு விட வேண்டும். தினமும் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அன்று முழுவதும் தங்களுடன் வைத்துவிட்டு மறுநாள் அடுத்த ஒரு ரூபாயை எடுக்கும் பொழுது இதை எடுத்து தனியாக வைத்து நவம்பர் மாதம் முழுவதும் ஒன்று சேர்த்து உண்டியலில் போட்டுவிடலாம். இந்த வழிபாட்டை தினமும் செய்ய வேண்டும். தினமும் ஒரு ரூபாய் நாணயத்தையுமை இனிப்பையும் கையில் வைத்துக்கொண்டு குபேரரின் மந்திரத்தையும் துதியையும் சொல்லி உபயோகப்படுத்துவதன் மூலம் குபேர சம்பத்து உண்டாகும்.
குபேர துதி
” வளம் யாவும் தந்திடுவாய் வைஷ்ணவனே போற்றி
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
குறைவில்லா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
மங்களங்கள் தந்து எம்மை மகிழ்விப்பாய் போற்றி
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
பொங்கிடும் நலம் யாவும் உன் அருளே போற்றி
போற்றி குபேரா போற்றி போற்றி “
செல்வ செழிப்புடன் அனைத்து விதமான சம்பத்துகளையும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் குபேர பகவானுக்குரிய இந்த வழிபாட்டை செய்யலாம்.



