குளுவாங்:
எதிர்வரும் ஜோகூர் மாநில தேர்தலுக்கான பிரச்சாரக் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள வேளையில், மெங்குபோல் (Mengkibol) பகுதியில் பக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியின் கொடிகள் மற்றும் பதாகைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பி.எச் கூட்டணியின் 10 கொடிகள் மற்றும் 3 வேட்பாளர் பலகைகள் கிழிக்கப்பட்டு, அருகில் இருந்த சாக்கடைகளில் வீசப்பட்டுக் கிடக்கக் கண்டறியப்பட்டன. ஜாலான் சோங் ஹுவா (Jalan Chong Hwa) மற்றும் தாமான் அமானில் உள்ள ஜாலான் அமான் (Jalan Aman) ஆகிய பகுதிகளில் இச்சேதங்கள் நடந்துள்ளன. இது குறித்து இன்று காலை 10.30 மணியளவில் கட்சியின் 43 வயது பிரதிநிதி ஒருவர் குளுவாங் மாவட்ட காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கோத்தா திங்கி, பெல்டா குகுசான் அடேலா (Felda Gugusan Adela) பகுதியில் தன்ஜோங் சூரத் தொகுதி பி.எச் வேட்பாளர் ஃபைசூல் அப்துல் கனியின் பிரச்சாரக் கொடி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் பஹ்ரின் முகமட் நோ, “பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் நாசவேலை” என்ற குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டம் பிரிவு 427-இன் (Section 427 Penal Code) கீழ் இந்த விவகாரம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததிலிருந்து ஜொகூர் மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பான 7 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்று சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைப் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தகைய நாசவேலைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
The post குளுவாங்கில் பிரச்சார சுவரொட்டிகள், கொடிகள் சேதம்; பக்காத்தான் ஹரப்பான் போலீசில் புகார்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

