குற்றம் செய்தவர்கள் பாதுகாக்கப்படும் சட்டக்கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் இருக்கும் வரை, இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றம் காணாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ‘மத்தியஸ்த சபை’ மற்றும் ‘குற்றவியல் சட்டத்தின் மூலமான பரஸ்பர ஒத்துழைப்பு’ ஆகிய சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“நாட்டில் பல வழக்குகள் 10 முதல் 15 வருடங்களாகத் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இத்தகைய சூழலில், மத்தியஸ்த சபையின் அறிமுகம் வீண் செலவுகளையும் நேர விரயத்தையும் குறைப்பதற்கு முக்கிய பங்காற்றும். சமூகப் பிரச்சினைகளை அந்தந்த சமூகத்தில் உள்ள பெரியவர்களின் ஊடாகத் தீர்த்துக்கொள்வது சிறந்தது.
குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை, சர்வதேச ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு மிக அவசியமாகும். நீண்ட காலமாக நாட்டைப் போதைப்பொருள் களஞ்சியமாக மாற்றி வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படாமல், அவர்களுக்குக் கீழ் இயங்கும் சிறு நபர்களை மட்டும் கைது செய்வதன் மூலம் இந்த ‘போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை’ கட்டுப்படுத்த முடியாது. சமூகத்தில் பிரமுகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்கூட இந்த வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். எனவே, குற்றமிழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்கள் தப்பிக்க இடமளிக்கக்கூடாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், இதுவரை மூன்று ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளனர்; ஆனால், இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இக்குற்றத்தைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் பாதுகாக்கப்படும் சட்டக்கட்டமைப்பும் அரசியல் சூழலும் இருக்கும் வரை இந்த நாடு முன்னேறாது. தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளைக் கண்டறியச் செயற்பட்டாலும், இன்னுமொரு தரப்பு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாகச் செயற்படுகின்றது. எது எப்படியிருப்பினும், உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

