கோலாலம்பூர்:
கெடாவில் நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 27 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துக் குபாங் பாசு மாவட்டச் சிவில் பாதுகாப்புப் படை (APM) அதிகாரி முஹம்மது அதெனின் சுஹைமி கூறுகையில், கம்போங் சாங்காட் செந்தோல் மற்றும் கம்போங் பெலுகார் ஆகிய கிராமங்களில் தலா 8 வீடுகளும், கம்போங் சுங்கை பெத்தானியில் 6 வீடுகளும், கம்போங் பாடாங்கில் 5 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இதுவரை அதிகாரப்பூர்வத் தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) எதுவும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள் அனைவரும் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ (Homestay) தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்ததைத் தொடர்ந்து போக்குவரத்து சீராகியுள்ளதாக” அவர் மேலும் கூறினார்.
தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் கெண்டைக்கால் அளவுக்குக் இன்னமும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கம்போங் பெலுகாரைச் சேர்ந்த 78 வயதான ஆயிஷா அகமட் என்ற மூதாட்டி கூறுகையில், தாம் இங்கு வாழும் 60 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வெள்ளத்தைச் சந்தித்து வருவதாகவும், ஒரு நாள் மழை பெய்தாலே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் வயதான காலத்தில் சிரமப்படுவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சுங்கை சிந்தோக், சுங்கை பாதாக் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ள போதிலும், இரண்டாவது அலை வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்களது வீட்டுப் பொருட்களை உயரமான இடங்களில் மாற்றி வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.



