கோலாலம்பூர்:
சரவாக்கில் தமக்குக் கீழ் பணிபுரியும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், அம்மாநிலத்தின் மாவட்ட போலீஸ் தலைவர் ஒருவர் மீது தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நேற்று போலீசில் செய்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் ஜைனல் அப்துல்லா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்ட அந்தப் பெண் அதிகாரி, தம்மைக் வீட்டிற்கு அழைத்தும், பணிபுரியும் இடத்திலும் அந்த உயர் அதிகாரி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 354 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், துறை ரீதியான சட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.




