Last Updated:
மல்லிகார்ஜூன கார்கேக்கு 24 மணி நேர நோட்டீஸ் வழங்கியதில் உள்நோக்கம் உள்ளது என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி, ஒரு வார அவகாசம் கோரியுள்ளது
பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் பதிலளிக்க மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று கூறியதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு கெடு விதித்திருந்தது.
இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த நோட்டீஸுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் தலைவருக்கு பதிலளிக்க 24 மணி நேரம் போதுமானதாக இருக்காது என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பேசிய வார்த்தைகளின் சூழ்நிலை குறித்த தெளிவான விளக்கத்தை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வழியைத் தேடும் முயற்சியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஒரு வார காலத்திற்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதனை விளக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழுவை அனுப்ப நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Delhi,Delhi,Delhi


