Last Updated:
காமன்வெல்த் 2026: இந்தியா 12 பதக்கங்களுடன் 9வது இடம். குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளி வென்றனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மேலும் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்ற இந்தியா, ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.
ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் குல்வீர் சிங் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடைசி சுற்றில் 3 ஆவது இடத்திற்கு சென்றார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட குல்வீர் சிங், 27 நிமிடங்கள் 49 விநாடிகளில் இரண்டாவதாக இலக்கை எட்டி வெள்ளி பதக்கத்தை வென்றார். இதன் மூலம் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை குல்வீர் சிங் படைத்தார்.
இதே போன்று, காமன்வெல்த் மகளிருக்கான 69 கிலோ பளுதூக்கும் பிரிவில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் 101 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் 123 கிலோவும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 227 கிலோ எடையை தூக்கி ஹர்ஜிந்தர் அசத்தினார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், குத்துச்சண்டையில் பிரீத்தி பவார், பிரியா கங்காஸ் மற்றும் ஜதுமணி சிங் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Jul 29, 2026 12:16 PM IST


