கோலாலம்பூர்:
சிலாங்கூரில் உள்ள காஜாங்கில் செயல்பட்ட 29 வெளிநாட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘காங் ஜான்’ எனப்படும் கடத்தல் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்தது.
‘போக்குவரத்து செய்பவராக’ செயல்பட்ட ஜோன் என்று அழைக்கப்படும் 42 வயதான இந்தோனேசிய நபர், அவரது கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் உதவியுடன் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புத்ராஜெயா குடிநுழைவு துறையின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு மாலை 6 மணியளவில் இந்த சோதனையை மேற்கொண்டது என்று, குடிநுழைவுதுறை டைரக்டர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.
இரண்டு வாரங்களாக மேற்கொண்ட உளவுத்துறை நடவடிக்கையை தொடர்ந்து, குழுவினர் குறித்த குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில், அந்த வளாகத்தின் பராமரிப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 20 மற்றும் 41 வயதுடைய இரண்டு இந்தோனேசியர்களையும் கைது செய்ய முடிந்தது என்று அவர் சொன்னார்.


