காசா போரின்போது 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிகக் கொடூரமான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான கூட்டுத் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மத்திய காசாவின் டெயிர் அல்-பலா நகரில் நடைபெற்றுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களில் 40 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களது உடல்களை மீட்க முடியாத நிலை காணப்பட்டது.
நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தம்
கடந்த ஒக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தாக்குதல்களின் தீவிரம் குறைந்ததையடுத்து, மீட்புப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.

பாலஸ்தீனக் கொடிகளால் போர்த்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதை மத்திய கிழக்கு ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
பின்னர் இடிந்த கட்டிடங்கள் மற்றும் போரால் சிதைந்த வீதிகள் வழியாக உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி காசா நகரில் அமைந்திருந்த குடியிருப்பு வளாகம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
112 பேரின் உடல்ககள்
அப்போது சம்பவ இடத்திலிருந்தவர்கள் வெறும் கைகளாலும் எளிய கருவிகளாலும் இடிபாடுகளை அகற்றி சுமார் 40 உடல்களை மட்டுமே மீட்டிருந்தனர்.

கடந்த வார இறுதியில் காசா சிவில் பாதுகாப்புப் படையினர் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி, மேலும் 112 பேரின் உடல் எச்சங்களை மீட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அந்தத் தாக்குதலுக்குப் பின்னரும் 157 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காசா சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபரில் அமலுக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்படவில்லை.
எனினும், தாக்குதல்களின் தீவிரம் ஓரளவு குறைந்ததன் காரணமாக, இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கும் ஆயிரக்கணக்கானோரின் உடல் எச்சங்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

