கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் இன்று (15.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தின் பயணப் பொதிகள் நகரும் பாதை இலக்கம் 06க்கு அருகில் கைவிடப்பட்டிருந்த இரண்டு பொதிகளை சோதனையிட்டபோதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கமரா காட்சி
கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் காற்றுப்புகாத வகையில் 60 பொதிகளில் அடைக்கப்பட்டு, இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் நேற்று (14) தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சிறி லங்கன் எயார்லைன்ஸ் UL-405 விமானத்தில் பயணித்த ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த நபர் தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒத்துழைப்புடனும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

