ஓடியாங்க.. ஓடியாங்க..! அமெரிக்க அரசை விட அதிக வட்டி வருமானம் தரும் Microsoft Bond..!
உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது ஓப்பன்ஏஐ மற்றும் அந்திரோபிக் நிறுவனங்களுக்குப் போட்டியாக உயர வேண்டும் என்பதற்காகக் கடுமையான இலக்குடன் மறுசீரமைப்பு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே 60000 ஊழியர்களுக்குத் தன்னார்வ விடுப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த ஏஐ உலகில் வெற்றி பெறுவதற்குப் பெரிய அளவிலான நிதி ஆதாரமும், கட்டமைப்பும், திறன் வாய்ந்த ஊழியர்களும் வேண்டும் என்பதால் மைக்ரோசாப்ட் வங்கிகள்களில் கடன் வாங்குவதை விடுத்து முதலீட்டுச் சந்தையில் பத்திரங்கள் விற்பனை செய்து முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மைக்ரோசாப்ட் அமெரிக்காவின் Securities and Exchange Commission சமர்ப்பித்த அறிக்கையில், சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைத் திரட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு 17 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை இதைப் போல் பத்திரங்கள் விற்பனை வாயிலாக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களுக்கு அதிக கிரெடிட் ரேட்டிங் வாங்குவது கடினம் என்ற நிலையிலும் மூடிஸ், எஸ்&பி ஆகியவை AAA ரேட்டிங் கொடுத்துள்ளது.
அமெரிக்க அரசு பத்திரங்களுக்கு தற்போது 4.915 சதவீத வட்டி வருமானமும், 30 வருடப் பத்திரத்திற்கு 5.2 சதவீத வட்டி வருமானமும் கிடைக்கும் வேளையில் மைக்ரோசாப்ட் நிறுவன பத்திரங்களுக்கு சுமார் 6.35 சதவீதம் வரையிலான வட்டி வழங்கத் தயாராகியுள்ளது மைக்ரோசாப்ட்.
அரசு பத்திரங்களைக் காட்டிலும் கூடுதலான ரிஸ்க் கொண்டது இந்த நிறுவன பத்திரங்கள் என்றாலும் AAA ரேட்டிங் கொடுக்கப்பட்டதால் கடந்த முறை பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
மைக்ரோசாப்ட் இந்த பத்திரத்தை முதிர்வு காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களைப் பிரித்துள்ளது. இதேபோல் 2028 முதல் 2066 வரையிலான 40 ஆண்டுக் கால பத்திரங்களை 10 பகுதிகளாக விற்க உள்ளது மைக்ரோசாப்ட்.
இதோடு இந்த பத்திரங்களை நிலையான வட்டி விகிதத்திலும் விற்கப்படுகிறது, ஃப்ளோடிங் ரேட் அடிப்படையிலும் விற்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிர்வாகம்.
உதாரணமாக 2028ல் முதிர்வு அடையும் பத்திரங்களுக்கு 4.85 சதவீத வட்டியும், 2029ல் முதிர்வு அடையும் பத்திரங்களுக்கு 5 சதவீத வட்டியும் இப்படி 2056ல் முதிர்வு அடையும் பத்திரங்களுக்கு 6.25 சதவீத வட்டியும், 2066ல் முதிர்வு அடையும் பத்திரங்களுக்கு 6.35 சதவீத வட்டியும் வழங்குகிறது.
இதில் திரட்டப்படும் நிதி அனைத்தும் கார்ப்பரேட் நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் என பொதுவாகக் கூறப்பட்டாலும், பெரும்பகுதி நிதி நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட உள்ளது.

