ஒரு ரீல்ஸுக்கு ரூ.4000; ஒரு டிவீட்டுக்கு ரூ.2000..!! கேள்வி எழுப்பும் இசையமைப்பாளர் அனிருத்..!!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வளர்ந்து நிற்பவர் அனிருத். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் ,கமல் ,விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு எல்லாம் இசை அமைத்திருக்கிறார். அனிருத் பாடல் என்றாலே நிச்சயம் அது ஹிட் ஆகிவிடும் என்ற அளவிற்கு தமிழ் திரையுலகில் அதிக டிமாண்ட் கொண்ட ஒரு இசையமைப்பாளர் என்ற பெருமை கொண்டவர்.
அனிருத் தன்னுடைய திரைப்படப் பாடல்களை கடந்து தனிப்பட்ட முறையில் ஆல்பங்களையும் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அரவிந்த் என்ற பெயரில் அவர் ஒரு தனிப்பட்ட ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார். பிரபல பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உடன் இணைந்து அனிருத் இந்த அரவிந்த் என்ற தனிப்பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். அதில் இடம்பெற்று இருக்கக்கூடிய பாடல் வரிகள் பலரது கவனத்தையும் பெற்று இருக்கின்றன.

பணம் பெற்றுக்கொண்டு செயற்கையாக சமூக வலைதளங்களில் சில விஷயங்களை விளம்பரம் செய்வது அதிகரித்திருக்கக்கூடிய சூழலில் அவற்றை கேள்வி எழுப்பும் வகையில் இந்த பாடலின் வரிகள் இடம் பெற்று இருக்கின்றன. ஒரு டிவிட்டுக்கு 2000 ரூபாய், ஒரு ரீல்ஸுக்கு 4000 ரூபாய், ஒரு நடனத்திற்கு 10,000 ரூபாய் என வாங்கும் போக்கை நிறுத்திக் கொள்ளுங்கள் என்ற வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இது தொடர்பாக அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அனிருத் இந்த டிரெண்ட் மாற வேண்டும் என கூறியிருக்கிறார். ஒரு டிவீட்டுக்கு 2000 ரூபாய், ஒரு ரீல்ஸுக்கு 4000 ரூபாய் என்ற போக்கை நிறுத்துங்கள் என கேட்டுக் கொண்டிருக்கும் அவர் தன்னுடைய அரவிந்த் ஆல்பம் ஒரு தற்காலிக வைரஸ் சென்சேஷன் ஆக மாறிவிடாமல் நீடித்து தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் செயற்கையாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்த அனிருத்தின் பேச்சு இது தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் , எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் ஆயிரக்கணக்கான முதல் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை வைத்திருப்பவர்களை கொண்டு தான் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையே மார்க்கெட்டிங் செய்கின்றன. இதனை influencer marketing என அழைக்கின்றனர். பாரம்பரியமான தொலைக்காட்சி மற்றும் ஊடக விளம்பரங்களை கடந்து இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது.
பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்புகளை தற்போது இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாகத்தான் விளம்பரம் செய்கின்றன. இவர்களை கொண்டு விளம்பரம் செய்யும்போது அது நேரடியாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை சென்று சேர்கிறது அந்த பொருளை அல்லது அந்த சேவையை அவர்களை வாங்க செய்கிறது. இதற்காகவே தனி மார்க்கெட்டிங் ஏஜென்சிகளே செயல்படுகின்றன. அவர்கள் இன்ஃப்ளூயன்சர்களை தொடர்பு கொண்டு விளம்பரம் செய்ய வைப்பார்கள்.
ஒரு போஸ்டுக்கு இத்தனை ஆயிரம் ஒரு ரீல்ஸ் போட்டால் இத்தனை ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். ஆயிரங்களில் ஃபாலோவர்களை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கட்டணம் , லட்சக்கணக்கில் ஃபாலோவர்களை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கட்டணம் என வழங்கப்படும். குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் லட்சங்கள் வரை வழங்கப்படுகிறதாம்.
இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் துறையின் மதிப்பு சுமார் 3,000 முதல் 3,500 கோடி ரூபாய் வரை உள்ளது. இது ஆண்டுக்கு 22% என்ற வீதத்தில் வளர்ந்து வருகிறது. அதே போல இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் சுமார் 40 முதல் 44 லட்சம் ஆக்டிவ் கிரியேட்டர்கள் (Active Creators) உள்ளனர். இவ்வாறு ஒரு விஷயத்தை டிரெண்டாக்க பிராண்டுகளின் முதல் சாய்ஸ் இன்ஸ்டாகிராம் (Instagram) தான். 93% விளம்பரதாரர்கள் இதையே விரும்புகிறார்கள்.
இதனை பயன்படுத்தி சில நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பலருக்கும் பணம் கொடுத்து சில விஷயங்களை ஆன்லைனில் டிரெண்ட் செய்கின்றன. இதனால் சில சமயங்களில் உண்மையான திறமைகள் வெளிச்சத்துக்கு வராமலே போய்விடுகின்றன. காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வைரல் ஆக்கலாம் என்று இந்த கலாச்சாரம் உண்மையான திறமைகளை மழுங்கடிக்க செய்கிறது என்பதுதான் அனிருத் போன்றோர் வெளிப்படுத்தும் ஆதங்கமாக உள்ளது.

