Last Updated:
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மைதானத்திற்குள் நுழைந்த விராட் கோலியின் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது கொல்கத்தா மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த விராட் கோலியின் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட்டை ஒரு மதமாக பார்க்கும் முரட்டு பக்தர்கள், விராட் கோலி போன்ற ஆகச்சிறந்த வீரர்களை தங்களின் கடவுளாகவே பாவிக்கின்றனர். அவர்களின் தரிசனம் நேரில் கிடைக்காதா என்று ஏங்கித் துடிக்கும் கோடான கோடி ரசிகர்களுக்கு மத்தியில், முரட்டு ரசிகர் ஒருவர் கோலியை தேடிச் சென்று காலில் விழுந்து வணங்கியுள்ளார். அதற்காக, அவர் தேடிச் சென்ற இடம் தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கேகேஆர் நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆர்சிபி அதிரடியாக ஆடியது. குறிப்பாக ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி, வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
அதைக் கண்டு அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்திருந்த போது, ஒரு ரசிகர் மட்டும் உற்சாக மிகுதியில் திடீரென தடுப்பு வேலி மீது ஏறி உள்ளே குதித்தார். அடுத்த நொடியே மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர், பேட்டிங் செய்து கொண்டிருந்த கோலியை நோக்கி ஓடினார். அவரைக் கண்டதும், தனது முரட்டு ரசிகர் என்பதை உணர்ந்து கொண்ட விராட் கோலி சலனமின்றி இருந்தார்.
திடீரென தனது காலில் விழுந்தவரை, கை தாங்கலாக தூக்கிவிட்டார். விராட் கோலியை அருகில் இருந்து கண்ட உற்சாகத்தில் ரசிகர், அவரை கட்டிப்பிடித்தார். பதிலுக்கு கோலியும் கட்டிப்பிடித்து தனது ரசிகரின் அன்பை பகிர்ந்து கொண்டார். ஆனால், அத்துமீறிய ரசிகரின் செயலைப் பார்த்து பாதுகாப்பு அதிகாரிகள் பதறினர். உடனடியாக உள்ளே ஓடி வந்தவர்கள், அந்த ரசிகரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
இதையும் படிக்க: சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ஸ்பின்னர்.. யார் இந்த விக்னேஷ் புத்தூர்?
இப்போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையோ, விராட் கோலி அதிரடி அரைசதம் விளாசியதையோ சமூக வலைதளத்தில் பெரிதுபடுத்தாத ரசிகர்கள், அவரின் முரட்டு ரசிகர் செய்த சம்பவத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
அதேவேளையில், மைதான எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளே சென்ற ரசிகர் மீது, புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், பீகார் மாநிலம் ஜமல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான ரிதுபர்னோ என்ற அந்த ரசிகரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற ரசிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈடன் கார்டன் மைதான பாதுகாவலர்கள் எச்சரித்துள்ளனர்.
March 24, 2025 8:04 AM IST


