India
oi-Vishnupriya R
பாட்டியாலா: நீட் மறுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற பஞ்சாப் மாணவன் ஆர்யந் குப்தா தனது பாட்டிக்காக படித்தேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நீட் மறுத்தேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளேன்.

எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என கடுமையாக உழைத்தேன். தூக்கத்தை தொலைத்தேன். ஆனால் இப்போது எனக்கு கனவு போ் இருக்கிறது.
என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் ஒரு நாளைக்கு 16 முதல் 17 மணி நேரம் படித்தேன். நான் புற்றுநோயியல் துறை நிபுணராக வேண்டும் என ஆசை உள்ளது.
நான் 3ஆம் வகுப்பு படிக்கும் போதே எனது பாட்டி புற்றுநோயால் உயிரிழந்தார். அது முதல் நான் மருத்துவராக வேண்டும் என லட்சியத்தை கொண்டு படித்தேன். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு படித்தாலே போதுமானது என ஆர்யன் குப்தா தெரிவித்திருந்தார்.
ஆர்யனின் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்! நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடந்தது.
இதில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தன. வினாத்தாள் டெலிகிராமில் லீக்காவதால் இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலியை கூட மத்திய அரசு தடை செய்து வைத்தது.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 551 நகரங்களில் 5,440 மையங்களி, 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியிருந்தனர். இந்த மறுத்தேர்வு மே 3-ஆம் தேதி நடந்த தேர்வை காட்டிலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
நீட் மறுத்தேர்வு நடத்தப்பட்டதால் அதன் முடிவுகள் எப்போது என மாணவர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் வரும் 20-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
ஆனால் நேற்றைய தினம் திடீரென தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 11.21 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பன்சூல் ஆகிய மாணவர்கள் 720 மதிப்பெண்களுக்கு தலா 715 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 138 மாணவர்கள், 720 மதிப்பெண் முதல் 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் 58 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களையும் 1492 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேல், 10160 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல், 90,780 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 705 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேசிய அளவில் முதல் 17 இடங்களை பிடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தென்னிந்திய மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. வழக்கம் போல் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய அளவில் 1.08 லட்சம் இடங்கள் மருத்துவ படிப்புக்காக காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



