ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, அது சாதாரண கட்டி அல்ல, மாறாக ஒரு மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது விரிவான மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
இலங்கையின் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் 55 வயது நோயாளி ஒருவரின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோகிராம் எடையுள்ள கல் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
இது உலகிலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல்லாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்த நோயாளி, சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு அடிவயிற்றுப் பகுதியில் ஒரு கட்டி இருப்பது போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, அது சாதாரண கட்டி அல்ல, மாறாக ஒரு மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது விரிவான மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
நிபுணத்துவ மருத்துவர்கள் குழுவினால் கடந்த 14ஆம் திகதியன்று இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அகற்றப்பட்ட இந்தக் கல் 14 முதல் 19 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்தக் கல்லின் எடையானது ஒன்பது மாதங்கள் நிறைவடைந்து பிறக்கும் ஒரு குழந்தையின் சராசரி எடைக்கு (3.0–3.5 கிலோகிராம்) சமமானதாகும்.
இந்தக் கல், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல்லாக அமையக்கூடும் என்பதால், இது கின்னஸ் உலக சாதனைக்காக சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், தேவையான வசதிகளை வழங்கிய வைத்தியசாலை நிர்வாகத்துக்கும், இந்தச் சாதனையை நிகழ்த்திய வைத்தியக் குழுவுக்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

